வேலூரில் பயங்கரம்: வாலிபர் கத்தியால் குத்திக்கொலை - தப்பியோடிய 4 பேருக்கு வலைவீச்சு

வேலூரில் முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-04-20 07:45 GMT
வேலூர், 

வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் தெருவை சேர்ந்தவர் உதய் என்கிற உதயகுமார் (வயது 34). இவர் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே மனமகிழ் மன்றம் நடத்தி வந்தார். 2 பெண்களை திருமணம் செய்த உதயகுமார் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் மீது வேலூர் வடக்கு, தெற்கு, அரியூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, அடி-தடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுடன், உதயகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த இளம்பெண்ணின் அண்ணன், உதயகுமாரை எச்சரித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இளம்பெண்ணின் அண்ணனுக்கும், உதயகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து இளம்பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வெளியே சென்றிருந்த உதயகுமார் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென உதயகுமாரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதயகுமார் சுதாரிப்பதற்குள் அவரது கழுத்து, வயிறு, நெஞ்சு பகுதிகளில் சரமாரியாக குத்தினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து 4 பேரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவ இடத்துக்கு பதற்றத்துடன் வந்த குடும்பத்தினர் உதயகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அங்கு பொதுமக்களும் திரண்டனர். தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று உதயகுமார் உடலை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கொலை செய்தவர்கள் யார்?, முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பியோடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இளம்பெண்ணுடன் பழகியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் உதயகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்திற்கு பின்னர் இளம்பெண்ணின் அண்ணன், மாமா உள்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர். எனவே அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 4 பேரையும் தீவிரமாக தேடி வருகிறோம். அவர்களை பிடித்தால் உண்மை தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்