புதிய பஸ் நிலையத்தில் திரைப்பட கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் - பாட்டுப்பாடி நடனமாடினர்

புதுச்சேரி பஸ் நிலையத்தில் கூடிய பொதுமக்கள் முன்னிலையில் திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பாட்டுப்பாடி, நடனமாடி கொரோனா குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Update: 2020-04-20 07:45 GMT
புதுச்சேரி, 

உலக மக்களை நடுநடுங்க வைக்கும் வைரஸ் கொரோனா. எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத வல்லரசு நாடுகள் எல்லாம் கொரோனா தாக்குதலால் அஞ்சி நடுங்குகின்றன. கொரோனாவில் இருந்து தப்பிக்கவும், அந்த நோயில் இருந்து தற்காத்து கொள்ளவும் ஒரே வழி தனிமை படுத்திக்கொள்வதுதான். இதனால் உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். எனவே அவர்களுக்கு கொரோனாவின் கோரதாண்டவம் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பல்வேறு கார்ட்டூன்களும் மக்களை கவர்ந்துள்ளது.

இந்தநிலையில் புதுச்சேரி தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் நேற்று கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் புதுச்சேரியை சேர்ந்த தமிழ் திரைப்பட நடிகர்கள் மாறுவேடம் அணிந்து பொதுமக்கள் முன்னிலையில் கொரோனாவை விரட்டியடிப்பது எப்படி? என்பது குறித்து பாட்டுப் பாடியும், நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இரவு பகலாக மக்களுக்காக பணியாற்றி வரும் காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் சமூக இடைவெளி, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது குறித்தும் கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு அச்சுறுத்தி வருகிறது என்பது குறித்தும் பாட்டு பாடி, நடனமாடி பொதுமக்கள் முன்னிலையில் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.

மேலும் செய்திகள்