அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்தவில்லை - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

புதுவையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்தவில்லை என அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டி உள்ளார். புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-04-20 07:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை கொரோனா நிவாரணத்திற்கு ஒதுக்கித் தர முடிவு எடுத்து இருந்தனர். அதன்படி முதல்-அமைச்சரும் அதை பிடித்தம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா நிவாரணத்துக்காக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பிடித்தம் செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பும், வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதையடுத்து புதுவையில் அந்த திட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கைவிட்டுவிட்டார். மேலும் புதுவையிலும் வீட்டிற்கு ரூ.5 ஆயிரத்தை கொடுத்து கூட்டணி தர்மத்தை காப்பாற்ற வேண்டும்.

கடந்த 18-ந் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவால் 1,372 பேர் பாதிக்கப்பட்டனர். 365 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது. ஆனால் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேரில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் இறப்பு 12.5 சதவீதமாகும்.

தமிழகத்தை குறை கூறாமல் புதுச்சேரியின் நிலையை எண்ணி அதற்குரிய ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட வேண்டும். புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் ஏதுமில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தும் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்தவில்லை.

குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு கடைகளில் விலைப் பட்டியல் வைக்க உத்தரவிட்டார். ஆனால் எந்த கடையும் இதை செய்யவில்லை. அரசே அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் என்றார். ஆனால் இதுவரை எந்த பொருளுக்கும் அரசு விலையை நிர்ணயிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்