கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு: 200 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை 60 முடிவுகள் வெளிவந்துள்ளதாக அதிகாரி தகவல்

முதற்கட்டமாக 200 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், 60 பேரின் முடிவுகள் வெளிவந்துள்ளது என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி கூறினார்.

Update: 2020-04-20 05:59 GMT
பெரம்பலூர், 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் முதற்கட்டமாக 200 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், 60 பேரின் முடிவுகள் வெளிவந்துள்ளது என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி கூறினார்.

சுகாதாரப்பணிகள்

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பி வந்த பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்நிலையில் அவரது உறவினரான வி.களத்தூரை சேர்ந்த 23 வயதுடைய ஆண் ஒருவருக்கும், மேலும் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சேலம் மாவட்டம் நாவக்குறிச்சியை சேர்ந்த 47 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கும், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் 4-வது வார்டு கீழவீதியை சேர்ந்த 4 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பாளையம், வி.களத்தூர் ஆகிய பகுதிகளில் முன்னதாகவே நேற்று முன்தினம் முதல் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சுகாதாரப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

60 பேரின் முடிவுகள் வந்துள்ளன

மேலும் போலீசாரும் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன், தொடர்பில் இருந்தவர்களில் முதற்கட்டமாக 200 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், 60 பேரின் முடிவுகள் வெளிவந்துள்ளன. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை எளிதில் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு வரவுள்ளன என்றார்.

மேலும் செய்திகள்