ஊரடங்கால் கால்நடைகளுக்கு உணவாகும் முலாம்பழங்கள் கடனை அடைக்க முடியாததால் விவசாயிகள் கவலை
ஊரடங்கால் முலாம்பழம் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், அவை கால்நடைகளுக்கு உணவாகின்றன. வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தாமரைக்குளம்,
ஊரடங்கால் முலாம்பழம் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், அவை கால்நடைகளுக்கு உணவாகின்றன. வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முலாம்பழம்
அரியலூர் மாவட்டம், ஓ.கூத்தூர், கோவிந்தபுரம், மணக்கால், சுப்பிராயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் முலாம்பழம் சாகுபடி செய்துள்ளனர். கொரோனா பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள, 144 தடை உத்தரவால் முலாம்பழத்தை வாங்க வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் யாரும் வராததால், பழங்கள் அனைத்தும் விவசாய நிலத்திலேயே பறிக்காமல் வீணாகின்றன.
இதுகுறித்து ஓ.கூத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி கூறுகையில், நான் 2½ ஏக்கர் விவசாய நிலத்தில் முலாம்பழம் பயிரிட்டுள்ளேன். தற்போது, பழங்கள் பறிக்கும் தருவாயில் உள்ளது. ஊரடங்கால், தொழிலாளர்கள் வர முடியாததால் அவைகளை பறிக்க முடியாமல் செடியிலேயே கிடக்கின்றன. அவற்றை எலிகள் கடித்து சேதப்படுத்து கின்றன. மேலும் ஊரடங்கால் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வருமானம் இன்றி...
வியாபாரிகள் முலாம்பழத்தை வாங்கி செல்லாததால், நாங்களே பழத்தை கொண்டு சென்று விற்பனை செய்யலாம் என்றாலும், வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு முலாம்பழம் விளைவிக்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகிறது. தற்போது பழங்களை விற்பனை செய்ய முடியாததால் சிலர் பழத்தை பறிக்காமல் வயலிலேயே விட்டு விடுகின்றனர். சிலர் அவற்றை பறித்து வந்து கால்நடைகளுக்கு உணவாக வைக்கின்றனர்.
கடன் வாங்கி முலாம் பழம் பயிர் செய்தோம். ஆனால் இப்போது வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், வருமானம் இன்றியும் தள்ளாடி வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார். பயிரிடப்பட்ட முலாம்பழங்கள் வயலில் வீணாகி வருவதை பார்த்து விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.