தினத்தந்தி’ செய்தி எதிரொலி: குளித்தலையில் சமூக இடைவெளியை கடைபிடித்த பொதுமக்கள்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குளித்தலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
குளித்தலை,
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குளித்தலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
முக கவசம் அணிவதில்லை
கரூர் மாவட்டம் குளித்தலை நகரப்பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையில் தினசரி ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி தினந்தோறும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு நிற்பதை கண்காணித்தும், அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தியும் வருகின்றனர். இந்தநிலையில் குளித்தலை உழவர் சந்தை பகுதி, காவிரி நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரம் வைத்து பால், தயிர் விற்பவர்களிடம் பொதுமக்கள் பால் மற்றும் தயிர் வாங்கிச் சென்றுவருகின்றனர். அப்படி வரும் பொதுமக்களில் பலர் முக கவசம் அணிவதில்லை. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று பால் வாங்கி செல்கின்றனர்.
கொரோனா நோய்தொற்று அதிகரித்துவரும் காரணத்தால் கரூர் மாவட்டம் ஏற்கனவே தமிழகத்தில் சிவப்பு மண்டலத்தில் ஒன்றாக இருக்கிறது. இந்தநிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. இதுபோன்ற நபர்களால் வியாபாரிகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் எவ்வளவு அறிவுரைகள் கூறினாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்களில் பலர் அதை ஒரு பொருட்டாக கருதாமல் உள்ளனர் என்று ‘தினத்தந்தி’யில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது.
சமூக இடைவெளி
இதன் எதிரொலியாக குளித்தலை உழவர் சந்தை பகுதியில் பால் வாங்கவரும் பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள தெருவின் இரண்டு பக்கத்திலும் தன்னார்வலர்கள் மூலம் கட்டங்கள் வரையப்பட்டன.
இதன்பின்னர் நேற்று குளித்தலை உழவர்சந்தை பகுதிக்கு வந்த வட்டார துணை வேளாண்மை அலுவலர் கணேசன் மற்றும் உழவர் சந்தை அலுவலர்கள் பால் வாங்கவந்த பொதுமக்களிடம் அங்கு வரையப்பட்டுள்ள கட்டங்களில் நின்று சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினார்கள். இதனையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பால் வாங்கி சென்றனர். இதுதொடர்பாக செய்திவெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.