சென்னையில் இருந்து சிறப்பு பார்சல் ரெயில் மூலம் ஒரே நாளில் 97 டன் மருத்துவ உபகரணங்கள் திருச்சி வந்தன

திருச்சி ஜங்சனுக்கு சென்னையில் இருந்து பார்சல் ரெயில் மூலம் ஒரே நாளில் 97 டன் மருத்துவ உபகரணங்கள் வந்தன.

Update: 2020-04-20 02:48 GMT
திருச்சி, 

திருச்சி ஜங்சனுக்கு சென்னையில் இருந்து பார்சல் ரெயில் மூலம் ஒரே நாளில் 97 டன் மருத்துவ உபகரணங்கள் வந்தன.

சிறப்பு பார்சல் ரெயில் சேவை

ஊரடங்கு காரணமாக சரக்கு ரெயில்கள் தவிர, பயணிகள் ரெயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களான முககவசம், கிருமி நாசனி, கை கழுவும் திரவம் உள்ளிட்டவைகளின் தேவை அதிகமாகி விட்டது.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி முதல் சென்னை-நாகர்கோவில், நாகர்கோவில்-சென்னை இடையே திருச்சி வழியாக ரெயில் என்ஜினுடன் குறிப்பிட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு பார்சல் ரெயில் மூலம் பார்சல் அனுப்பும் துரித சேவை தொடங்கியது. திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, விழுப்புரம், அரியலூர், விருத்தாசலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு முன்பதிவு செய்த அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை கள் திருச்சி ரெயில்வே பார்சல் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

97 டன் மருத்துவ உபகரணம்

இந்தநிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து சிறப்பு பார்சல் ரெயில் மூலம் திருச்சி ஜங்சனுக்கு ஒரே நாளில் 97 டன் மருத்துவ உபகரண பொருட்கள் பார்சலில் வந்தன. கை கழுவும் திரவம், கையுறை, முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் திருச்சியில் உள்ள பல்வேறு மருந்தகங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வந்தன. அவை பார்சல் பெட்டியில் இருந்து உடனடியாக இறக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மருந்து விற்பனை பிரதிநிதிகள் எடுத்து சென்றனர். இதுவரை வந்த பார்சல்களில் இதுதான் அதிக டன் எடையுள்ளது என தெரிவிக்கப்பட்டது. முன்னதாக பார்சல் ரெயிலுக்கு திருச்சி ரெயில்வே சுகாதாரத்துறை மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதன் பின்னரே பார்சல்கள் இறக்கப்பட்டன.

மேலும் செய்திகள்