வெட்டுவதற்கு ஆள் கிடைக்காததால் மரத்திலேயே பழுத்து வீணாகும் நேந்திரன் வாழைத்தார்கள்

திருச்சி அருகே வெட்டுவதற்கு ஆள் கிடைக்காததால் நேந்திரன் வாழைத்தார்கள் மரத்திலேயே பழுத்து வீணாகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

Update: 2020-04-20 02:08 GMT
திருச்சி, 

திருச்சி அருகே வெட்டுவதற்கு ஆள் கிடைக்காததால் நேந்திரன் வாழைத்தார்கள் மரத்திலேயே பழுத்து வீணாகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

நேந்திரன் வாழை சாகுபடி

திருச்சி உய்யகொண்டான், கட்டளை உள்ளிட்ட காவிரியின் கிளை வாய்க்கால்களை நம்பி திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் குழுமணி, மருதாண்டாகுறிச்சி, சீராத்தோப்பு, பேரூர், சோமரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

இங்கு பயிரிடப்படும் நேந்திரன் வாழைத்தார்கள் சிப்ஸ் தயாரிப்பதற்காக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக வியாபாரிகள் தோப்பிற்கே நேரடியாக வந்து வாழைத்தார்களை வாங்கி செல்வார்கள். இந்த ஆண்டு இந்த பகுதிகளில் முன்கூட்டியே வாழை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் நன்கு விளைந்த நிலையில் இருந்த நேந்திரன் தார்களை வியாபாரிகளுக்கு விற்று விட்டனர்.

பழுத்து வீணாகிறது

சற்று தாமதமாக (பிந்தைய பட்டம்) சாகுபடி செய்த விவசாயிகள் தார்களை அறுவடை செய்வதற்குள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. இதனால் இந்த தார்கள் வாழை மரத்திலேயே பழுத்து வீணாகி வருகின்றன. தார்களை வெட்டுவதற்கு ஆள் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். வழக்கமாக நன்றாக விளைந்த நேந்திரன் தார்கள் ஒரு கிலோ ரூ.20 வரை விற்பனை ஆகும். ஆனால் தற்போது அவை பழுத்து விட்டதால் ஒரு கிலோ ரூ.8 முதல் 10-க்கு வாங்குவதற்கு கூட ஆள் இல்லை. இதனால் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி விட்டதாக விவசாயிகள் புலம்பி வருகிறார்கள்.

உளுந்து

இதேபோல, சோமரசம்பேட்டை பகுதியில் பயிரிடப்பட்ட உளுந்து செடிகளிலும் உளுந்து அறுவடைக்கு தயார் நிலையில் காய்ந்து போய் உள்ளது. ஆனால் அறுவடைக்கு ஆள் கிடைக்காததால் அவை செடியுடன் உதிரும் நிலையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்