அழகப்பா பல்கலைக்கழகத்தில் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2020-04-19 23:15 GMT
காரைக்குடி, 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறை தலைவர்கள், இயக்குனர்கள் மற்றும் உறுப்பு கல்லூரி முதல்வர்களுடன் துணைவேந்தர் ராஜேந்திரன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

இதில் கொரோனா பாதிப்பால் பல்கலைக்கழகம் மூடப்பட்ட தேதியில் இருந்து, தற்போது வரை அனைத்து துறைகளில் நடைபெறும் ஆய்வு பணிகள், திட்டப்பணிகள் இந்த பருவத்தில் உள்ள புதிய பாடத்திட்ட அலகுகள், மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்குவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அதில் ஒவ்வொரு துறை தலைவர்களும், ஆசிரியர்கள், மாணவர்களுடன் ஆன்லைன் மூலமாக தொடர்பில் இருப்பதையும், அதன் மூலமாக பாடங்களை நடத்தி முடித்துள்ளது பற்றியும் குறிப்பிட்டனர்.

மேலும் ஆய்வு பணிகள் மற்றும் திட்டப் பணிகளும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகின்றன. அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக செயல்படுத்தி உள்ள அழகப்பா யுனிவர்சிட்டி ஆன்லைன் பிளாட்பார்ம் என்ற இணையதளம் மூலமாக ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு, ஆசிரியர்கள் தாங்கள் நடத்த வேண்டிய பாடங்களை ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு நடத்தி வருகின்றனர்.

அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தில் பயின்று வரும் மாணவர்களுக்கான பர்சனல் காண்டாக்ட் புரோகிராம் மூலம் வகுப்புகள் இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது. காணொலி வாயிலான இந்த நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் ராஜன் மற்றும் அவரது குழுவினர் புதிய தொழில்நுட்பத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்