மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது எப்போது? விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் காமராஜ் தகவல்

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது எப்போது? என்பது குறித்து விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2020-04-19 23:36 GMT
மன்னார்குடி, 

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது எப்போது? என்பது குறித்து விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

பேட்டி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 23-வது வார்டு மற்றும் 29-வது வார்டு பகுதியில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகரசபை முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் பொன்.வாசுகிராம், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் தமிழ்ச்செல்வம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள்

கொரோனா வைரஸ் தமிழகத்தில் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்றாவது நிலைக்கு செல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் உறவுகளையும், நட்பையும், சமுதாயத்தையும் பாதுகாக்க ஊரடங்கை பின்பற்ற வேண்டும். இதுவரை குடும்ப அட்டைதாரர்கள் 98 சதவீதம் பேர் ரூ.1,000 உதவித்தொகை பெற்றுள்ளனர். 3 லட்சத்து 62 ஆயிரம் பேர் மட்டுமே ரூ.1,000 உதவித்தொகை வாங்காமல் உள்ளனர். அவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை 97 சதவீதம் பேர் பெற்றுள்ளனர். மே மாதத்திற்கு உரிய ரேஷன் பொருட்கள் எப்போது வழங்கப்படும்? என்பதை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களில் திருவாரூரில் சிகிச்சை பெற்று வந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 14 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ரூ.500-க்கு மளிகை பொருட்கள்

ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவைப்படும் இடங்களில் ரூ.500-க்கு மளிகை பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தேவையுள்ள இடங்களில் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 75 சதவீத அமைப்புசாரா தொழிளாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்