தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு வீதிகளில் நடமாடியவர்கள் போலீசாரை பார்த்ததும் தலைதெறிக்க ஓட்டம்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையடுத்து மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்துக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.;

Update: 2020-04-19 22:57 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையடுத்து மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்துக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. வீதிகளில் நடமாடியவர்கள், போலீசாரை பார்த்ததும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

மக்கள் நடமாட்டம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான காய்கறி, மளிகை, மருந்து பொருட்கள் வாங்குவதற்காக அனுமதிக்கப்பட்டனர். ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தஞ்சை மாநகரில் 21 இடங்களில் காய்கறி கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஊரடங்கில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப் பட்டது.

முழு ஊரடங்கு

இந்த நிலையில் மக்கள் நடமாட்டத்தை மேலும் குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில் 3 வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இது கடந்த 14-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அடையாள அட்டை வாரத்தில் 6 நாட்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மருந்துக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன.

வெறிச்சோடியது

இதனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்தவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். நேற்று காலையில் மக்கள் நடமாட்டம் ஆங்காங்கே காணப்பட்டது. இதையடுத்து ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசார் ரோந்து வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். வீதிகளில் வந்த பொதுமக்களை, போலீசார் விரட்டி விட்டனர். வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. மேலும் ரோந்து வந்த போாலீசாரை பார்த்தும் வீதிகளில் நடமாடியவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அதையும் மீறி வந்தவர்களை போலீசார் தடியால் தாக்கி விரட்டியடித்தனர்.

ஸ்தம்பித்தது

இந்த ஊரடங்கு உத்தரவினால் மக்கள் பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்தது. மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் மட்டும் இயங்கின. பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல செயல்பட்டன. ஆனால் வாகனங்கள் இயங்காததால் அவைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

பட்டுக்கோட்டை

முழு ஊரடங்கையொட்டி பட்டுக்கோட்டை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டன. தெருக்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், மருந்து கடைகள் என அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தது. இதனால் தஞ்சை - கும்பகோணம் சாலை வெறிச்சோடி கிடந்தது. முழு ஊரடங்கையொட்டி தாராசுரம் மார்க்கெட் பகுதியில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு சில கடைகள் மூடப்பட்டன. குறிப்பாக அங்குள்ள சில்லறை காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் தாராசுரம் காய்கறி மார்க்கெட் இழுத்து மூடப்பட்டது. முழு அடைப்பையொட்டி கும்பகோணம் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி,பூதலூர் ஆகிய பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

ஐ.ஜி. சாரங்கன் ஆய்வு

இந்த ஊரடங்கு உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு சிறப்பு ஐ.ஜி.சாரங்கன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். தஞ்சை கீழவாசல், பழைய பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அண்ணா சிலை, மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் ஐ.ஜி.சாரங்கன் நிருபர்களிடம் கூறும்போது, கொரோனா தொற்று மேலும் பரவாமல் பொதுமக்களைக் காக்கும் வகையில் இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது என்றார்.

மேலும் செய்திகள்