ராமேசுவரத்தில் ஐஸ் கட்டி தொழிலையும் கரைய வைத்த கொரோனா

ராமேசுவரத்தில் ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிலையும் கொரோனா காரணமாக ஏற்படுத்திய ஊரடங்கு கரைய வைத்துள்ளது.

Update: 2020-04-19 22:30 GMT
ராமேசுவரம், 

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே ராமேசுவரம் தீவு பகுதியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி தொழிலுக்கு முக்கிய தேவை ஐஸ்கட்டிகள்தான். மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஐஸ் கட்டிகளுக்குள் வைத்து பதப்படுத்தி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும். அது போல் மீன் பிடிக்க செல்லும் போதே ஒவ்வொரு படகிலும் சுமார் 30 முதல் 40 கட்டிகள் வரையிலும் மீனவர்கள் வாங்கி செல்வது வழக்கம்.

ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதிகளில் மட்டும் ஐஸ்கட்டி உற்பத்தி செய்யும் பல கம்பெனிகள் செயல்படுகின்றன. அங்கு ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கடந்த ஒரு மாதமாக ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள ஐஸ்கட்டி உற்பத்தி செய்யும் கம்பெனிகளும் மூடப்பட்டு கிடக்கின்றன. இது பற்றி ஐஸ்கட்டி கம்பெனி உரிமையாளர் மயில்சாமி கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ராமேசுவரம் தீவு பகுதியில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு அனைத்து கம்பெனிகளையும் சேர்த்தால் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் கட்டிகளுக்கு மேல் உற்பத்தி செய்தோம். ஒரு ஐஸ்கட்டி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும்.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல விதித்த தடையால் ஐஸ்கட்டி உற்பத்தி தொழில் ஒரு மாதமாக முழுமையாக முடங்கி உள்ளது. ஐஸ் எப்படி கரையுமோ, அதே போன்று கொரோனா காரணமாக எடுத்த நடவடிக்கைகள் ஐஸ் கட்டி தொழிலையும் கரைத்து வருகின்றன. இதனால் இதை நம்பியுள்ள சுமார் 300 குடும்பங்கள் வருமானமின்றி தவிக்கின்றன. எனவே அந்த குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்