நெல்லையில் நவீன முறையில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை - கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
நெல்லையில் நவீன முறையில் கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனையை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார். இதற்காக 1,000 நவீன கருவிகள் நெல்லைக்கு வந்துள்ளன.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரசால் 60 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நெல்லை ரெட் அலார்ட் மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, நெல்லை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிய, அவரை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அங்கு மட்டுமே பரிசோதனை செய்து முடிவு தெரிவிக்கப்படுகிறது. ரத்த, சளி மாதிரியை பரிசோதனை செய்ய 3 மணி நேரம் ஆகிறது.
இதை விரைவுபடுத்தவும், அவரவர் பகுதிக்கு நேரடியாக சென்று அங்கேயே ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்‘ எனப்படும் நவீன கருவி சீனாவில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாவட்டத்துக்கு 1,000 நவீன கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அந்த கருவிகள் நேற்று முன்தினம் இரவு நெல்லைக்கு வந்து சேர்ந்தன.
இந்த கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் பணி நேற்று தொடங்கியது. நெல்லை மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் இதற்காக முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு நவீன கருவி மூலம் பரிசோதனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், அரசு ஆஸ்பத்திரி முன்னாள் டீன் கண்ணன், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து போலீசாருக்கும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தெருக்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
நடமாடும் பரிசோதனை வேன்
பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்று ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் அவரவர் இருக்கும் இடத்துக்கே சென்று மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.
அப்போது வைரஸ் இருக்கிறதா? என்று தெரியவரும். இதில் பாசிட்டிவ் இருந்தாலும் கொரோனா இருக்கிறது என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. சம்பந்தப்பட்ட நபரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று அடுத்தகட்ட ‘பி.சி.ஆர்.‘ பரிசோதனை மேற்கொள்ளப்படும். நடமாடும் பரிசோதனை வேன்கள் உள்ளன. இந்த வேன் களில் குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொள்வார்கள்.
3,500 பேர்
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில், ஏற்கனவே 23 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்று, அங்கு தங்களை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு 14 நாட்கள் கழித்து மறுபடியும் பரிசோதனை செய்யப்படும். அதில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் பூரண குணமடைந்து விட்டனர் என்று முடிவு செய்யப்படும்.
இதுதவிர வெளியூர்களில் இருந்து வந்த 3,500 பேர் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். தற்போது மருத்துவ அவசரத்துக்காக பிற பகுதிகளில் இருந்து பலர் வருகின்றனர். சோதனைச்சாவடிகளில் அவர்களது விவரங்களை சேகரித்து, அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
கட்டுப்பாட்டு பகுதி
நெல்லை மாவட்டத்தில் பத்தமடை, களக்காடு, வள்ளியூர், மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், கோடீசுவரன் நகர், கே.டி.சி. நகர், பேட்டை, டார்லிங் நகர் ஆகிய 9 பகுதி கட்டுப்படுத்துதல் பகுதியாக உள்ளது.
9 கட்டுப்பாட்டு பகுதியில் யாரும் வெளியே வரக்கூடாது. 1,000 ரேபிட் கிட் மூலம் 1,000 பேருக்கு மட்டுமே சோதனை செய்ய முடியும். இவை தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும். மேலும் புதிய ரேபிட் கருவிகள் அடுத்தடுத்து வரும். கடந்த 2 வாரத்தில் மட்டும் 1,200 பேருக்கு ‘பி.சி.ஆர்.‘ பரிசோதனை செய்து உள்ளோம். மற்ற பகுதிகளில் இந்த அளவுக்கு பரிசோதனை செய்தது கிடையாது. ஆஸ்பத்திரிக்கு வரக்கூடிய அறிகுறி இருப்பதாக வரும் நோயாளிகள் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டு உள்ளது. நெல்லையில் கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள், காய்ச்சல் உள்ளவர்களின் விவரங்களை சேகரித்தது போல் மாவட்டம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேபிட் கருவி
இந்த கருவி மூலம் பரிசோதனை செய்வது எளிமையாக உள்ளது. ஒருவருடைய கை விரலில் ஊசியால் குத்தி ரத்த மாதிரியை சேகரிக்கிறார்கள்.
பின்னர் ரேபிட் கிட் எனப்படும் கருவியில் ரத்த மாதிரியை செலுத்தப்படுகிறது. அதில் காணப்படும் வேறுபாடுகளை கொண்டு கொரோனா அறிகுறி உள்ளதா? இல் லையா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு கருவி ஒருவருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய பயன்படுத்தப் படுகிறது.