ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற மாவட்ட எல்லைகள் அடைப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டன.
புஞ்சைபுளியம்பட்டி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து மாவட்ட எல்லைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் உள்ள கரூர், திருப்பூர், கோவை, நாமக்கல் போன்ற மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. அந்த வழியாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு மட்டும் போலீசார் அனுமதி வழங்கி வருகிறார்கள். மேலும், பொதுமக்கள் உரிய அனுமதி கடிதம் பெற்றிருந்தால் மட்டுமே மற்ற மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பல்வேறு கிராமப்புறங்களில் உள்ள மாவட்ட எல்லைகள் வழியாக எந்தவொரு அனுமதி கடிதமும் பெறாமல் மக்கள் சென்று வருகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் சென்றது. இதையடுத்து கிராமப்புறங்களில் உள்ள மாவட்ட எல்லைகளையும் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள 3 மாவட்ட எல்லைகள் நேற்று முட்செடிகளை கொண்டு முழுமையாக அடைக்கப்பட்டது. நொச்சிக்குட்டை, நம்பியூர் இணைப்பு சாலை ஆகிய பகுதிகளில் உள்ள திருப்பூர் மாவட்ட எல்லைகளும், ஆலாம்பாளையம்ரோட்டில் உள்ள கோவை மாவட்ட எல்லையும் மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார்களில் வந்தவர்கள் திரும்பி சென்றனர்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை அந்த சாலைகளின் வழியாக போக்குவரத்து செல்ல அனுமதிக்கப்படாது என்று போலீசார் தெரிவித்தனர்.