எலையமுத்தூர் பகுதியில் தானிய பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
எலையமுத்தூர் பகுதியில் தானிய பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தளி,
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் உள்ளது. மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகளை நீராதாரமாகக் கொண்ட இந்த அணைகளுக்கு மழைக்காலங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்்வரத்து ஏற்படுகின்றது. அதைத் தவிர்த்து திருமூர்த்தி அணைக்கு மட்டும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த அணைகளை நீ்ராதாரமாக கொண்டு கோவை திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு, சப்போட்டா, கொய்யா மற்றும் அவரை, கத்தரி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். அத்துடன் சுற்றுப்புற கிராமமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர்திட்டங்களும் இந்த அணைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள் அணைகள் ஏரிகள் குளங்கள் உள்ளிட்டவற்றில் கோடை காலத்திற்கு முன்பாகவே நீர்இருப்பு குறைந்து விட்டது. அதுமட்டுமின்றி கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகின்றது. அமராவதி அணையின் நீர்்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் வறட்சியின் காரணமாக வறண்டு விட்டன.
இதனால் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்்வரத்து நின்று விட்டதால் அணையின் பெரும்பாலான பகுதிகள் மண்திட்டுக்கள் பாறைகளாக காட்சி அளித்து வருகிறது. ஆனால் பி.ஏ.பி.அணைகளின் உதவியால் திருமூர்த்தி அணைநீர் இருப்பை பெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர்் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எலையமுத்தூர் பகுதியில் தரிசு நிலங்களில் கம்பு சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த பயிர்கள் தற்போது நல்லமுறையில் வளர்ச்சி அடைந்து கதிர்கள் பிடித்து வருகின்றது. அவற்றை பராமரிப்பு செய்து உரமிடுதலில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் வெப்பத்தின் தாக்குதல் காரணமாக பயிர்களுக்கு தண்ணீர்் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்து வருகின்றனர். இதன் காரணமாக கம்பு, சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களில் எதிர்பார்த்த அளவு விளைச்சலை பெறுவதற்கான சூழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.