தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லை அருகே நீலகிரி மாவட்டம் உள்ளது. மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் 16 சோதனைச்சாவடிகள் உள்ளன. இவை வெளிமாநிலங்கள் மற்றும் கோவை மாவட்டத்தை இணைக்கும் சாலைகளில் அமைந்து இருக்கிறது. சோதனைச்சாவடிகள் உள்பட நீலகிரி முழுவதும் 1,177 போலீசார், 750 ஆயுதப்படை போலீசார் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
போலீசாருடன் இணைந்து தேசிய மாணவர் படை மாணவர்கள், தன்னார்வலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே ஊரடங்கு உத்தரவில் தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்களை தடுக்க விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் 12 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்வந்தனர். நீலகிரி முழுவதும் 60 முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட ஊட்டி காந்தல் பகுதியிலும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு உள்ளது. யாரேனும் உள்ளே வந்தாலோ அல்லது வெளியே சென்றாலோ அனுமதிப்பது இல்லை. மருத்துவத்துக்காக வெளியே செல்கிறவர்கள், தன்னார்வலர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுபவர்களை கண்டிப்பதுடன், சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினியால் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களது சீருடையில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.