திருவண்ணாமலை பகுதியில், தர்பூசணி, முலாம் பழங்களை கிலோ ரூ.2-க்கு கேட்கும் வியாபாரிகள் - நஷ்டத்தால் பறிக்காமல் விடுவதால் வயலிலேயே அழுகும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தர்பூசணி, முலாம்பழங்களை வியாபாரிகள் கிலோ ரூ.2-க்கு கேட்பதால் பறிப்பதற்கு கொடுத்த கூலியை கூட பெற முடியாது என்பதால் அவற்றை விவசாயிகள் நிலத்திலேயே விட்டுவிட்டனர். இதனால் அந்த பழங்கள் அழுகி வருகினறன.;

Update: 2020-04-19 06:51 GMT
திருவண்ணாமலை, 

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அனைவரும் தர்பூசணி மற்றும் முலாம் பழத்தை அதிகளவில் வாங்கி சாப்பிடுவார்கள். தர்பூசணியும், முலாம் பழமும் அதிக நீர் சத்து நிறைந்ததாகும். அதில் மருத்துவ குணமும் உள்ளது. தர்பூசணியும், முலாம் பழமும் திருவண்ணாமலை அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் கோடைக்கால பயிராக விவசாயிகள் அதிகளவில் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் நடமாட்டமும், வாகனப்போக்குவரத்தும் இல்லை. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராததால் தர்பூசணி, முலாம் பழம் வியாபாரம் ஒட்டு மொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள தர்பூசணி, முலாம் பழங்களை அறுவடை செய்து, விற்க முடியாமலும், வெளியூருக்கு வாகனங்களில் ஏற்றி அனுப்ப முடியாமலும் விளை நிலங்களிலேயே கடும் வெயிலில் வெம்பியும், அழுகியும் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் தர்பூசணியும், முலாம் பழமும் பயிரிடப்பட்டு உள்ளது. இந்தப் பழங்கள் பெரும்பாலும் வாகனங்களில் ஏற்றி சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் போக்குவரத்து இல்லாமல் பழங்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டு சென்றாலும், பெருமளவில் மக்கள் யாரும் வந்து வாங்குவதில்லை. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.10-க்கு வாங்கிய மொத்த வியாபாரிகள் தற்போது கிலோ ரூ.2-க்கும், ரூ.3-க்கும் கேட்கிறார்கள்.

இதனால் எங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போட்ட முதல் கூட கிடைக்காத நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தர்பூசணி, முலாம் பழம் சாகுபடியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்