வாங்க ஆட்கள் அதிகம் வருவது இல்லை... உரிய விலையும் இல்லை... மார்க்கெட்டில் பூக்களை குப்பைகளில் கொட்டும் அவலம்

பூக்களை வாங்க ஆட்கள் அதிக அளவில் வராததாலும், உரிய விலையும் இல்லாததால் புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை குப்பைகளில் கொட்டும் அவலம் தொடருகிறது.

Update: 2020-04-19 05:45 GMT
புதுக்கோட்டை, 

பூக்களை வாங்க ஆட்கள் அதிக அளவில் வராததாலும், உரிய விலையும் இல்லாததால் புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை குப்பைகளில் கொட்டும் அவலம் தொடருகிறது.

ஊரடங்கு

கொரோனா வைரசின் தாக்கம் உலகையே புரட்டி போட்டு விட்டது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகுவதை தடுக்க ஊரடங்கு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருப்பதோடு, அனைத்து விதமான தொழில்களும் முடக்கமடைந்துள்ளன. குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில்கள் பெருமளவு நஷ்டமடைந்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையும் பூக்களை கமிஷன் மண்டியில் விவசாயிகள் விற்று வருகின்றனர். இதிலும் போக்குவரத்து வசதி இல்லாதது மற்றும் உரிய விலை இல்லாததால் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விடும் விவசாயிகள் பலர் உள்ளனர்.

ஒரு சில விவசாயிகள் மட்டும் பூக்களை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வந்தாலும் அதனை வாங்குவதற்கு அதிகமாக ஆட்கள் யாரும் வருவது இல்லை. அதற்கு உரிய விலையும் இல்லை.

கோவில்கள் மூடல்

புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட் ஊரடங்கு காரணமாக காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை இயங்குகிறது. இதில் தினமும் குறிப்பிட்ட அளவு விவசாயிகள் மல்லிகை, சம்பங்கி, கனகாம்பரம், முல்லை, செண்டி, சாதிப்பூ உள்ளிட்ட பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஏலக்கடைக்காரர்கள் அதனை ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். சில வியாபாரிகள் அதனை ஏலம் எடுத்து கூறு போட்டு விற்று வருகின்றனர். இதனை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வருவதில்லை. ஒரு சில சில்லரை வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

இதனால் பூக்கள் பல விற்பனையாவது இல்லை. அந்த பூக்களை அருகில் உள்ள குப்பைகளில் வியாபாரிகள் கடந்த சில நாட்களாக தினமும் கொட்டி செல்கின்றனர். பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:-

ஊரடங்கினால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்களும் அதிகம் வெளியில் செல்வதில்லை. சுப காரிய நிகழ்ச்சிகளும் அதிகம் நடைபெறவில்லை. இதனால் பூக்கள் விற்பனை என்பது அதிக அளவில் இல்லை.

இதனால் விவசாயிகள் பலர் பூக்களை விற்பனைக்காக மார்க்கெட்டிற்கு எடுத்து வருவதில்லை. ஒரு சிலர் தான் வேறு வழியில்லாமல் குறைந்த தொகையாவது கிடைக்கட்டும் என்ற எதிர்பார்ப்பில் வருகின்றனர். அவ்வாறு வந்தாலும் போதுமான விலை கிடைப்பதில்லை.

குப்பையில் கொட்டப்படுகிறது

சம்பங்கி பூ ஒரு கிலோ ரூ.20-க்கும், மல்லிகை பூ ரூ.120 முதல் ரூ.150-க்கும் விற்பனையாகிறது. இதனையும் அதிகம் யாரும் வாங்க முன் வருவதில்லை. சில்லரை வியாபாரிகள் சிலர் வாங்கி சென்று கடைவீதிகளிலும், தெருக்களிலும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவர்கள் பூக்களை வாங்கி வியாபாரம் செய்வதால் விவசாயிகளுக்கு குறைவான தொகை கிடைக்கிறது. அதுவும் பூக்களை கொண்டு வருவதற்கான செலவு மற்றும் பறிப்பதற்கான கூலி ஆகியவற்றை கணக்கிட்டால் நஷ்டம் தான் எங்களுக்கு மிச்சம். எங்களை யார் கண்டுகொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்கெட்டில் ஏலக்கடைக்காரர் ஒருவர் கூறுகையில், புதுக்கோட்டை மற்றும் கீரமங்கலம் ஆகிய 2 இடங்களில் கமிஷன் மண்டி உள்ளது. புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக டன் கணக்கில் பூக்கள் விற்பனையாகாமல் குப்பையில் கொட்டப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்