கீரமங்கலம் பகுதியில் பூக்களை கொண்டு செல்லும்போது அபராதம் விதிக்கும் போலீசார் செடிகளிலேயே மலர்ந்து நாசமாவதால் விவசாயிகள் வேதனை

கீரமங்கலம் பகுதியில் பூக்களை கொண்டு செல்லும்போது போலீசார் அபராதம் விதிப்பதாலும், பூக்கள் செடிகளிலேயே மலர்ந்து நாசமாவதாலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2020-04-19 05:33 GMT
கீரமங்கலம், 

கீரமங்கலம் பகுதியில் பூக்களை கொண்டு செல்லும்போது போலீசார் அபராதம் விதிப்பதாலும், பூக்கள் செடிகளிலேயே மலர்ந்து நாசமாவதாலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பூக்கள் உற்பத்தி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, குளமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி மற்றும் திருவரங்குளம், வம்பன், மழையூர் என சுமார் 100 கிராமங்களில் பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இங்கு உற்பத்தியாகும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ரோஜா, அரளி, சம்பங்கி என அனைத்து வகை பூக்களும் பல மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் பூக்கள் விற்பனை முற்றிலும் முடங்கியதால் ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை பூக்கள் செடிகளிலேயே மலர்ந்து கொட்டி நாசமானது. இதனால் விவசாயிகள் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர்.

தடை செய்யாதீர்கள்

கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் செடிகளிலேயே வீணாகுவதை அறிந்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பூக்களை விற்பனை செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்வதாக கூறியிருந்தனர். இந்தநிலையில் தான், அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள இரும்பாளி கிராமத்தில் உள்ள இயற்கை நறுமண எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் இருந்து சம்பங்கி பூக்களை கொள்முதல் செய்து கொள்ள முன்வந்தனர்.

இதையறிந்த கீரமங்கலம் மற்றும் அரசடிப்பட்டி விவசாயிகள் தங்களிடம் இருந்த சம்பங்கி பூக்களை விற்க தொழிற்சாலைக்கு கொண்டு சென்றனர். அப்போது இடையில் வழிமறித்த போலீசார், அவர்களை திரும்பி போகக் கூறியதுடன், அபராதமும் விதித்துள்ளனர்.

இதுகுறித்து பூக்கள் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ஊரடங்கு அமல்படுத்திய பிறகு தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் செடிகளிலேயே வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், சம்பங்கி பூக்களை வாங்கிக் கொள்ள நறுமண எண்ணெய் தயாரிக்கும் ஆலை நிர்வாகத்தினர் முன்வந்தனர். ஆனால் பூக்களை கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம், விவசாயப் பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகளை தடுக்க வேண்டாம் என்று கூறினாலும் போலீசார் அதை கடைபிடிப்பதில்லை. அதனால் இனிமேல் பூ விவசாயிகள் பூக்கள் கொண்டு செல்லும் போது, தடை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறோம், என்றனர்.

மேலும் செய்திகள்