கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததால் கம்பம் உள்பட 3 நகரங்களில் கெடுபிடிகள் தளர்த்தப்படுமா? - அத்தியாவசிய பொருட்களுக்கு அல்லல்படும் மக்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய நகரங்களில் கெடுபிடிகளை தளர்த்தி, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2020-04-19 05:00 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் மொத்தம் 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், போடியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் சுற்றளவு வரை உள்ள பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. மருந்துக்கடைகள் மட்டுமே திறந்து உள்ளன.

எனவே அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் பகுதிகளை சேர்ந்த 3 பேர் உள்பட 18 பேர் குணமடைந்தனர். இவர்கள் கடந்த 16-ந்தேதி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய நகரங்களை சேர்ந்த யாரும் தற்போது கொரோனா சிகிச்சையில் இல்லை.

எனவே கொரோனா பாதிப்பு இல்லாத இந்த 3 நகரங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதன்படி கம்பத்தை சுற்றியுள்ள க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்பட 6 கிராமங்கள், உத்தமபாளையத்தை சுற்றியுள்ள மார்க்கையன்கோட்டை, உ.அம்மாபட்டி உள்பட 16 கிராமங்கள், சின்னமனூரை சுற்றியுள்ள முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம், கன்னிசேர்வைபட்டி உள்பட 12 கிராமங்கள் என மொத்தம் 34 கிராமப்புற பகுதிகளிலும் கெடுபிடிகளை தளர்த்தி, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்