கொரோனா தொற்றில் இருந்து 23 பேர் குணம் அடைந்தனர் - நிம்மதியுடன் வீட்டுக்கு செல்வதாக பேட்டி

கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்த 23 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பினர். அவர்களை கலெக்டர் வழியனுப்பி வைத்தார். நிம்மதி அடைந்து வீட்டுக்கு செல்வதாக குணமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

Update: 2020-04-19 05:20 GMT
கோவை,

கொரோனா தொற்று ஏற்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே சிகிச்சை பெற்ற 28 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இந்தநிலையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் 23 பேர் குணம் அடைந்தனர். இவர்களில் கோவையை சேர்ந்தவர்கள் 10 பேர், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 4 பேர். திருப்பூரை சேர்ந்தவர்கள் 9 பேர் ஆவர். இவர்கள் நேற்று இரவு வீடு திரும்பினார்கள்.

கலெக்டர் ராஜாமணி அவர்களுக்கு பழங்களை கொடுத்து வழியனுப்பி வைத்தார். இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நிர்மலா, இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் குழந்தைவேல், டாக்டர் ரவிக்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ‘0‘ என்ற இலக்கை அடைய முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் உத்வேகத்துடன் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். அந்த அடிப்படையில் ஏற்கனவே பலர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இப்போது மேலும் 23 பேர் குணம் அடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சி அளித்துள்ளது. குணம் அடைந்தவர்கள் தங்களை தாங்களே மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கூறியதாவது:- கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதே என்ற அச்ச உணர்வும், குடும்பத்தினரை பிரிந்துள்ளோமே என்ற உணர்வும் இருந்தது. மருத்துவமனையில் டாக்டர்கள் எங்களை மிகவும் நல்லபடியாக கவனித்துக்கொண்டனர். எதையும் கேட்டு பெறும் நிலை எங்களுக்கு ஏற்படவில்லை. இதற்காக மருத்துவமனை நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். குணம் அடைந்ததால் நிம்மதி அடைந்துள்ளோம். விழிப்புணர்வுடன் இருப்போம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்