கேரட் கழுவும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கியது: தலை துண்டாகி இளம்பெண் பலி - ஊட்டி அருகே பரிதாபம்
ஊட்டி அருகே கேரட் கழுவும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால், தலை துண்டாகி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எதுமை கண்டி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி(வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமித்ரா(45). இவர்களுக்கு மணிகண்டன்(22), அருண்(15) என்ற 2 மகன்களும், நந்தினி(18) என்ற ஒரு மகளும் இருந்தனர். நந்தினி 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். சுமித்ரா தினக்கூலி அடிப்படையில் விவசாய தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவருடன் சேர்ந்து நந்தினியும் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊட்டி அருகே எப்பநாடு பகுதியில் ஒரு தோட்டத்தில் கேரட் அறுவடை செய்வதற்காக சுமித்ரா, நந்தினி ஆகிய 2 பேரும் மற்ற தொழிலாளர்களோடு சென்றனர். அங்கு கேரட்டுகள் அறுவடை செய்யப்பட்ட பின்னர், கழுவி மூட்டைகளாக லாரியில் ஏற்றி கேத்தி பாலாடாவுக்கு கொண்டு வரப்பட்டது. தொழிலாளர்களும் லாரியில் வந்தனர்.
அங்கு மூட்டைகள் பிரிக்கப்பட்டு கேரட் கழுவும் எந்திரத்தில் கேரட்டுகள் கொட்டப்பட்டன. தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தப்படுத்தப்பட்டு வெளியே வரும் கேரட்டுகளை தரம் பிரித்து மீண்டும் மூட்டைகளில் நிரப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக நந்தினியின் துப்பட்டா, கேரட் கழுவும் எந்திரத்தில் சிக்கியது. எந்திரம் வேகமாக சுழன்று கொண்டு இருந்ததால், அதில் அவரும் சிக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் தலை துண்டாகி பலியானார்.
இதை பார்த்த சக தொழிலாளர்கள் அச்சத்தில் அலறி துடித்தனர். தன் கண் முன்னே மகள் பரிதாபமாக இறந்து கிடப்பதை பார்த்து சுமித்ரா கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கேத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரட் கழுவும் எந்திரம் பாதுகாப்பாக உள்ளதா, அது சரிவர பராமரிக்கப்பட்டு வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. வனவிலங்குகள் தொல்லை இருப்பதால் இரவில் காய்கறிகளை அறுவடை செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், இதுபோன்ற சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு குன்னூர் தாசில்தார் குப்புராஜ் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று, விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து உரிய பாதுகாப்பு இன்றி இயங்கியதாக கூறி அந்த கேரட் கழுவும் எந்திரம் உள்ள நிலையத்துக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.