திண்டுக்கல் மாவட்டத்தில், பெண் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-04-18 22:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் டெல்லி, வெளிமாநிலத்துக்கு சென்று வந்தவர்கள், அவர்களின் உறவினர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிறுமி, பெண்கள், வாலிபர்கள், முதியவர்கள் என நேற்று முன்தினம் வரை மொத்தம் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் முதியவர் ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதற்கிடையே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் திண்டுக்கல் மற்றும் பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்தவர் 55 வயது ஆண். இவர் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதிக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். உடனே அவருக்கு சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேனிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதேபோல் பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் ஒரு பெண் மற்றும் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் பக்கத்து வீட்டில் வசிக்கின்றனர். அவர் மூலம் இவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்