தாசில்தார்-போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூப்பிரண்டு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனு
தாசில்தார்- போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனு அளித்தார்.
பெரம்பலூர்,
தாசில்தார்- போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனு அளித்தார்.
மாற்றுத்திறனாளி
தந்தை இறப்பிற்கு காரணமான தாசில்தார் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் வாணிய தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியும், பட்டதாரியுமான சக்திவேல்(வயது 34) நேற்று தனது உறவினர்களுடன் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில், நான் எனது கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறேன். தற்போது ஊரடங்கு உத்தரவினால் காலை 6 மணிக்கு கடையை திறந்து மதியம் 1 மணிக்கு பூட்டி விடுவேன். அது போலவே கடந்த 11-ந் தேதியும் கடையை மதியம் 1 மணிக்கு பூட்டி விட்டேன். எனது தாய்க்கு சர்க்கரை நோய் இருப்பதால், அவருக்கான மருந்து கடையின் குளிர்சாதன பெட்டியில் இருந்தது. இதனை எடுக்க இரவு 8 மணிக்கு எனது தந்தை சென்றார்.
மனு
கடையை திறந்து மருந்தை எடுத்த போது, அப்போது அந்த வழியாக ஆலத்தூர் தாசில்தார், பாடாலூர் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது போலீசார் எனது தந்தையை அடித்தும், தாசில்தார் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பிறகு கடையை திறந்ததாக, கடையை பூட்டி ‘சீல்’ வைத்தார். இதனால் மனமுடைந்த அவர் மறுநாள் காலையில் எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். பின்னர் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு இன்று (அதாவது நேற்று) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே எனது தந்தை இறப்பிற்கு காரணமான தாசில்தார், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.