பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு- சிறுவன் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு-சிறுவன் உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-04-19 03:02 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு-சிறுவன் உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் ஏட்டு-சிறுவன்

பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கலெக்டர் சாந்தா தலைமையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் புதுடெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பி வந்த பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி தனிமையில் இருந்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட ஒருவரும் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாறி இருந்தது. இந்நிலையில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வி.களத்தூரை சேர்ந்தவரின், உறவினரான 24 வயதுடைய ஆணுக்கும், மேலும் அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கும், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் 4-வது வார்டு கீழவீதியை சேர்ந்த 4 வயது சிறுவனுக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால், அவர்கள் 3 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

3 பேருக்கும் கொரோனா உறுதி

இதனால் அவர்கள் 3 பேரையும் சுகாதாரத்துறையினர் நேற்று முன்தினம் இரவே திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சுகள் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பரிசோதனை முடிவில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதாக நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

போலீசாரிடம் ரத்த மாதிரிகள்

மேலும் பாளையத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் வெளிநாடான சார்ஜாவில் இருந்து திரும்பி வந்தார். ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவனுடன் பழகியவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வைத்து, அவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக அனுப்ப முடிவு செய்துள்ளனர். பாளையம் கிராமத்திற்குள் நுழையும் பகுதிகளில் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் போலீஸ் ஏட்டுவுடன் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்