மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வர அனுமதி அட்டை வழங்கும் திட்டம் தொடக்கம்

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வர அனுமதி அட்டை வழங்கும் திட்டத்தை ஆணையர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Update: 2020-04-19 02:37 GMT
திருச்சி, 

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வர அனுமதி அட்டை வழங்கும் திட்டத்தை ஆணையர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

புதிய திட்டம்

திருச்சி மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 4 கோட்டங்களிலும் உள்ள வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்வதற்கான 5 வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாளை(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி வாரத்தில் ஒருநாள் மட்டும் அதுவும் வீட்டில் ஒருவர் மட்டும் வெளியே வந்து காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும். 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த அனுமதி அட்டையை பயன்படுத்த முடியும். மருத்துவ அவசரத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

காய்கறி சந்தை

மேலும், வெளியே வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும், அவ்வாறு வராவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக 11 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த வார்டுக்கு எந்த சந்தை என பொதுமக்களுக்கு வழங்கப்படும் அட்டையின் பின்பக்கம் சீல் வைத்து தரப்படுகிறது.

அந்த மார்க்கெட்டில் மட்டுமே அவர்கள் காய்கறிகள் வாங்கி செல்ல முடியும். இதன் மூலம் சந்தைகளில் கூட்டம் கூடுவது குறையும். பொதுமக்களுக்கு அனுமதி அட்டை வழங்கும் பணியை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்