தெலுங்கானாவில் இருந்து சின்ன சேலத்துக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் அரிசி வந்தது
தெலுங்கானாவில் இருந்து சின்னசேலத்துக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் அரிசி வந்தது.;
சின்னசேலம்,
இந்திய உணவு கழகம் மூலம் கொரோனா நிவாரணத்துக்காக தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரெயில்மூலம் தமிழகத்துக்கு அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம் நெற்குண்டா பகுதியிலிருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் அரிசி மூட்டைகள் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. இந்த சரக்கு ரெயிலில் இருந்த 52 ஆயிரத்து 500 மூட்டை புழுங்கல் அரிசியையும் லாரிகளில் ஏற்றி சின்னசேலம் கூகையூர் சாலையிலுள்ள சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவற்றை கொரோனா நிவாரணத் திட்டத்தின் கீழ் பொது வினியோக திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக கடலூர், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பணியை இந்திய உணவு கழக மேலாளர் வெங்கடாஜலம், உதவியாளர் திருநீலகண்டன், சேமிப்பு கிடங்கு மேலாளர் பழனியப்பன், ரெயில்நிலைய அதிகாரி சவுத்ரி, ஒப்பந்தக்காரர் தியாகராஜன் ஆகியோர் மேற் பார்வையிட்டனர். இதையொட்டி அங்கு ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.