நாகர்கோவிலில் முக கவசம் அணியாமல் வந்த 25 பேருக்கு அபராதம் 23 கடை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை
நாகர்கோவிலில் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் 23 கடைகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் 23 கடைகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக கவசம்
கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்தது.
இந்த உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் சென்றால் ரூ.50 அபராதம், கடைகளில் பணிபுரிபவர்கள் முக கவசம் அணியாமல் வேலை செய்தால் கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அறிவித்திருந்தார்.
அபராதம்
அதன்படி நேற்று முதன் முதலாக அபராத நடவடிக்கை நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தொடங்கியது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அவரவர்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். குறிப்பாக வடசேரி, கோட்டார், செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முக கவசம் அணியாமல் நடந்து வந்தவர்கள், இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
முதல் நாளில் நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தலா ரூ.50 வீதம் அபராதமாக ரூ.1,250 வசூலிக்கப்பட்டது. இதேபோல் மளிகை கடைகள், பேக்கரி கடைகள், காய்கறி கடைகளில் பணியாளர்கள் முக கவசம் அணியாமல் பணிபுரிந்ததற்காக 23 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.2 ஆயிரத்து 300 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மொத்தம் முக கவசம் அணியாததற்காக ரூ.3 ஆயிரத்து 550 அபராதமாக வசூலிக்கப்பட்டது என்று மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால் தெரிவித்தார். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.