நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி கடன் - மந்திரி எஸ்.டி.சோமசேகர் தகவல்

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறினார்.

Update: 2020-04-18 23:52 GMT
சித்ரதுர்கா,

கர்நாடக கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த விளைபொருட்களை நகரங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை. விவசாயிகளின் நலனை காக்க முதல்-மந்திரி எடியூரப்பா தயாராக உள்ளார். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைகளை பெற்று செயல்படுகிறார். இதை இந்த நாடே போற்றுகிறது. அதே போல் கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மைசூரு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த மாவட்ட நிர்வாகம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

ரூ.13 ஆயிரம் கோடி

மக்களுக்கு மருந்து-மாத்திரைகள் கிடைப்பதில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று அதிகரிகளுக்கு தெரிவித்துள்ளேன். மைசூரு மாவட்ட மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கூட்டுறவு வங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க எந்த தடையும் இல்லை.

இதுகுறித்து கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே அளவுக்கு கடன் வழங்கப்பட்டது.

இவ்வாறு மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறினார்.

மேலும் செய்திகள்