தடையை மீறி கல்வி கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - கர்நாடக அரசு எச்சரிக்கை
கர்நாடகத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்து உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் பொது கல்வித்துறை கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், அரசு அனுமதிக்கும் வரை பெற்றோரிடம் இருந்து கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில தனியார் பள்ளிகள், ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதாக தகவல் வந்துள்ளது. ஆன்லைனில் பாடம் நடத்த எந்த தடையும் இல்லை.
ஆனால் இதையே காரணமாக வைத்துக் கொண்டு, பெற்றோரிடம் கல்வி கட்டணத்தை செலுத்தும்படி வற்புறுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை கல்வி கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை
எனவே, பள்ளி கல்வித்துறை அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், பேரிடர் நிர்வாக சட்டத்தின் கீழ் அத்தகைய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.