ஊரடங்கு தளர்வில் பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கு அனுமதி கிடையாது - அஜித்பவார் அறிக்கை
ஊரடங்கு தளர்வில் பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கு அனுமதி கிடையாது என்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாளை (திங்கட்கிழமை) முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் இயங்கவும், வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
இந்தநிலையில், துணை முதல்-மந்திரி அஜித்பவார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாநிலத்தின் பொருளாதாரம் படிப்படியாக மேம்படுத்தப்படும். என்றாலும் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் செயல்படாது. பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கும் அனுமதி கிடையாது.
அதே நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி இருப்பதை உறுதி செய்வதற்கும், விவசாயம் சார்ந்த பணிகள் சரியான நேரத்தில் தொடங்குவதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக வரையறுக்கப்பட்ட முறையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
துவரம் பருப்பு, உளுந்து, பருத்தி ஆகியவற்றை அரசாங்கம் கொள்முதல் செய்யும். பால் மற்றும் மீன்வளம் சார்ந்த பணிகளை தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
குழந்தைகளுக்கு சத்துணவு
ஊரடங்கின் காரணமாக அங்கன்வாடிகள் மூடப்பட்டு இருந்தாலும் குழந்தைகளுக்கான சத்துணவு அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கப்படும். பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு மெய்நிகர் படிப்பை ஊக்குவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
வங்கிகளும், பிற நிதி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், அங்கு பொதுமக்கள் கூட்டமாக கூடாமல் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.