விருதுநகர் மாவட்டத்தில் 200 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் - கலெக்டர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் 200 பேர் மட்டும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள 121 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கலெக்டர் கண்ணன் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். மேலும் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் விரைவில் வீடு திரும்புவார்கள்.
ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களை பாதுகாத்து வருகிறோம். விருதுநகர் மாவட்டத்தில் தொடக்கத்தில் 3,289 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அதில் 3,089 பேர் 28 நாட்களை முடித்து விட்டனர். தற்போது 200 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் 28 நாட்களை முடித்து விட்டால் நோய் தொற்று பரவவில்லை என்று உறுதி செய்யலாம். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பெரிதளவில் இல்லை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்பகுதியில் தூய்மை பணிகள் குறைவாக உள்ளதாக தெரிய வந்தால் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் தூய்மை பணிகளை முழுமையடைய செய்ய வைக்க முடியும். ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தொற்று இல்லை என்ற நல்ல செய்தி வந்துள்ளது. இப்பகுதியில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.