படகு மூலம் சுண்ணாம்புகுளம் படகுத்துறைக்கு வந்த ஆந்திர மாநில மக்கள் தடுத்து நிறுத்தம்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க படகு மூலம் சுண்ணாம்புகுளம் படகுத்துறைக்கு வந்த ஆந்திர மாநில மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ளது சுண்ணாம்புகுளம் கிராமம். இது ஆந்திர மாநில எல்லை அருகே பழவேற்காடு ஏரியையொட்டி உள்ள கிராமம் ஆகும்.
இதன் அருகே பழவேற்காடு ஏரியை கடந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இருக்கம், வேநாடு ஆகிய சிறு தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் பெரும்பாலும் தமிழ் குடும்பத்தினர்களே வசித்து வருகின்றனர். அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக படகு மூலம் தமிழக பகுதியான சுண்ணாம்பு குளம் கிராமத்துக்கு தினமும் வந்து செல்வது வழக்கம்.
ஆந்திராவில் இருந்து தமிழக கிராமத்துக்கு படகு மூலம் வருபவர்களால் கொரோனா வைரஸ் தொற்று ஏதேனும் பரவக்கூடுமோ? என்கிற ஒருவித அச்சநிலையில் சுண்ணாம்புகுளம் பகுதி மக்கள் இருந்து வந்தனர். அவ்வாறு படகுகள் மூலம் தமிழகத்துக்கு தினமும் வரும் ஆந்திராவை வசிப்பிடமாக கொண்ட அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என சுண்ணாம்புகுளம் ஊராட்சி மன்றம் சார்பில் கும்மிடிப்பூண்டி தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தடுத்து நிறுத்தம்
இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் குமார், சுண்ணாம்புகுளம் பகுதியில் உள்ள படகுத்துறை பகுதிக்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது துணை தாசில்தார் ராஜேஷ் குமார், வட்ட வழங்கல் அதிகாரி ஜெயச்சந்திரன், சுண்ணாம்புகுளம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷா ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு பழவேற்காடு ஏரிக்கரையான சுண்ணாம்புகுளம் படகுத்துறை வரை ஆந்திர மாநில மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க சுண்ணாம்புகுளத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் உதவி செய்திட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று படகு மூலம் சுண்ணாம்புகுளம் படகுத்துறைக்கு வந்த ஆந்திர மாநில மக்கள், அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேவையான பொருட்களை சுண்ணாம்புகுளத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் வாங்கி கொடுத்து மீண்டும் படகு மூலமாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தீவுகளுக்கு அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.