ஊரடங்கால் சாலைப்பணி முடக்கம்: ஜல்லிக்கற்கள் குவிந்து கிடப்பதால் மக்கள் அவதி

திருப்பரங்குன்றம் அருகே சாலைப்பணி முடக்கம் அடைந்துள்ளதால் தெருக்களில் நடக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.;

Update: 2020-04-18 21:50 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் யூனியனுக்கு உட்பட்ட வேடர்புளியங்குளம் ஊராட்சியில் அங்கயற்கன்னி நகர், வி.பி.சிந்தன் நகர் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் சுமார் ரூ.1¼ கோடியில் தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கயற்கன்னி நகர் 2-வது தெரு முழுவதுமாக ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட்டன.

ஆனால் ஊரடங்கு காரணமாக சாலைப்பணி நடைபெறாமல் அப்படியே முடக்கம் அடைந்து விட்டது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தெருக்களில் குவியல், குவியலாக ஜல்லிக்கற்கள் கிடப்பதால் இரு சக்கர வாகனங்கள் அந்த பகுதியில் செல்ல முடியவில்லை. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு நடந்து கூட செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தெருக்களில் குடிநீர் லாரி கூட வராத நிலை இருப்பதால் பொதுமக்கள் மெயின் ரோட்டுக்கு குடங்களுடன் வந்து தட்டுதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இதேபோல தனக்கன்குளம் ஊராட்சி முல்லைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைப்பணி முடங்கிக் கிடக்கிறது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கில் இருந்து சாலைப்பணிகளுக்கு விலக்கு அளித்து உடனடியாக சாலைப்பணியை தொடங்கி விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்