16 ஆண்டுகளுக்கு பின் தாயுடன் இணைந்த மகன்; சாத்தூர் அருகே நெகிழ்ச்சி சம்பவம்
கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 16 ஆண்டுகளுக்கு பின் வாலிபர் தனது தாயுடன் இணைந்தார்.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நந்தவனபட்டி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி. சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள், 5 மகன்கள் உள்ளனர். லட்சுமியின் கணவர் இறந்து விட்டார்.
இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமியின் 3-வது மகன் பாண்டியராஜன் (வயது 33) திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து அப்போதே லட்சுமி சாத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
இதனிடையே 16 ஆண்டுகளுக்குப் பின்னர் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியராஜன் தனது தாய் லட்சுமியை தேடி வந்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனது மகனை சந்தித்த மகிழ்ச்சியில் லட்சுமி ஆனந்த கண்ணீர் விட்டார். இது குறித்து பாண்டியராஜன் கூறியதாவது:-
நான் சினிமா மோகத்தால் எனது ஊரை விட்டு சென்னை சென்றேன். அங்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தவித்த நான் பழைய பேப்பர் கடையில் வேலை செய்து கிடைக்கும் உணவை சாப்பிட்டு வந்தேன். தற்போது கொரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வேலை இல்லாமல் இருந்து வந்தேன். சாப்பிட வழியில்லாமலும், தங்க இடமில்லாமலும் தவித்தேன்.
இந்த நிலையில் தாயின் அருமை உணர்ந்து அவரைப் பார்க்க ஆசைப்பட்டேன். இதற்காக சென்னையில் இருந்து நான் நடைபயணமாகவே புறப்பட்டேன். வரும் வழியில் காவல் சோதனை சாவடியில் இருந்த ஒரு சில போலீசார் எனக்கு உணவு அளித்து அவ்வழியாக வரும் காய்கறி வண்டியில் ஏற்றி விட்டனர். இப்படியாக வண்டி, வண்டியாக ஏறி ஒரு வழியாக சாத்தூர் வந்து எனது தாயை சந்தித்தேன்.
16 ஆண்டுகளுக்கு பிறகு எனது தாயை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு கூறினார்.
பாண்டியராஜன் திடீரென சென்னையில் இருந்து வந்ததால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த கோரினர். பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்து சாத்தூர் கோட்டாட்சியர் காசிசெல்வி, தாசில்தார் ராமசுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று பாண்டியராஜனை பார்த்து விட்டு ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு தேவையான உணவு தொகுப்பை வழங்கினர்.