குடியாத்தம் சுற்று வட்டார பகுதியில், தென்னை நார், கயிறு தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு - 4 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைஇழந்தனர்
குடியாத்தம் சுற்று வட்டாரப் பகுதியில் தென்னை நார், கயிறு தொழிற்சாலைகள் இயங்காததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைஇழந்துள்ளனர்.
குடியாத்தம்,
குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பரதராமி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தென்னைநார் கயிறு தொழிற்சாலைகளும் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
தற்போது ஊரடங்கால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்தத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து குடியாத்தம் தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.ஜெகதீசன், தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர் எம்.மோகன் ஆகியோர் கூறியதாவது:-
இந்த தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்தத் தொழிற்சாலைக்கு முக்கிய தேவை தென்னை நார் மட்டைகள்.
தேங்காய்களை உரிக்கும்போது கிடைக்கும் நார், மட்டைகள் குடியாத்தம், ஆரணி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வாணியம்பாடி, காரியமங்கலம் ஆகிய ஊர்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவு லாரிகள் மூலமாக கொண்டு வரப்படுகிறது.
இதை மூலப்பொருளாகக் கொண்டு இந்த நார் தொழிற்சாலை மற்றும் கயிறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, தயாராகும் கயிறுகள் ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்கும், நேபாள நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு, தென்னை நார் துகள்கள் மூலம் பிட்ச் கட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
இந்தக் கட்டிகள் காளான் வளர்ப்பிற்கும், மாடித் தோட்டங்களுக்கு உரமாகவும், பல்வேறு பொருட்களை தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்தப் பிட்ச் கட்டிகள் அதிக அளவு வட மாநிலங்களுக்கும், மொத்த வியாபாரிகள் மூலமாக சீனா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தடை உத்தரவு காரணமாக 25 நாட்களாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான தேங்காய் நார் மட்டைகள் 144 தடை உத்தரவால் அவை வருவதில்லை. ஊரடங்கால் தற்போது தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ரூ.3 கோடிக்கும் அதிகமான பொருட்கள் தேங்கி உள்ளன. வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட பொருட்களுக்கான பணம் வராமல் அப்படியே நிலுவையில் உள்ளது. தற்போது 144 தடை உத்தரவால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழிற்சாலைகள் பெருமளவு வங்கி கடன் பெற்று இயங்குகிறது. 144 தடை உத்தரவால் மீண்டும் பழைய நிலைக்கு தொழில்கள் தொடங்க பல மாதங்கள் ஆகும். இதனால் வங்கி கடன் உதவி மற்றும் பல்வேறு சுமைகளை இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக தென்னை நார் தொழிற்சாலை மற்றும் கயிறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும். இந்தக் கயிறு மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கயிறு மற்றும் பிட்ச் கட்டிகள் ஆகியவற்றை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப லாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து தென்னை நார் மட்டைகள் தொழிற்சாலைகளுக்கு வர அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.