அரிமளம் ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
அரிமளம் ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரிமளம்,
அரிமளம் ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவித்து உள்ள நிலையில் கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், எப்போதும் போல் ஒரே மோட்டார் சைக்கிளில் 3, 4 பேர் செல்வது, ஒருவரை ஒருவர் தொட்டு பேசுவது, கிராம பகுதிகளில் விடியற்காலையில் செயல்படும் டீ கடைகளில் அருகே அமர்ந்து பேசுவது உள்ளிட்ட வழக்கமான பழக்க வழக்கங்களில் இருந்து கிராமமக்கள் மாறவில்லை.
இதற்கு முக்கிய காரணம் அரிமளம் ஒன்றியத்தில் பொதுமக்களிடம் கொரோனோ வைரஸ் தொடர்பான போதுமான விழிப்புணர்வு இல்லாததே காரணம். கிராம பகுதிகளில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்க பல்வேறு உபகரணங்களை மாநில அரசுகள் ஊராட்சிக்கு வழங்கினாலும் அவைகள் ஒரு சில தினங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு கிடப்பில் போடப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தற்போது அரசு வழங்கி வரும் மெகா செல்போன் மூலம் கிராமம், கிராமமாக இரண்டு சக்கர வாகனங்களில் சென்று அங்கு உள்ள தெருக்களில் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது. அதை தடுக்கும் வழிமுறைகள், கொரோனா வைரஸ் வராமல் முன்னெச்சரிக்கையுடன் எவ்வாறு பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறு ஏற்படுத்தினால் தான் மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் பல்வேறு முயற்சிகள் பயன் அளிக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அரிமளம் ஒன்றிய பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.