கிருமி நாசினி திரவம் தயாரிப்பதற்காக சரக்கு ரெயிலில் திருச்சி வந்த 2,750 டன் மூலப்பொருள் தனியார் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது
கிருமி நாசினி திரவம் தயாரிப்பதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,750 டன் மூலப்பொருள் திருச்சி வந்தது.
திருச்சி,
கிருமி நாசினி திரவம் தயாரிப்பதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,750 டன் மூலப்பொருள் திருச்சி வந்தது. அவை டேங்கர் லாரிகளில் ஏற்றப்பட்டு தனியார் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கிருமி நாசினி திரவம் தட்டுப்பாடு
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், அவ்வாறு வருபவர்கள் முககவசம் அணிவதோடு, கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி திரவம் மூலம் கழுவி சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் மருந்து கடைகளில் கிருமி நாசினி திரவங்களை வாங்கி வருவதால் பல கடைகளில் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
சரக்கு ரெயிலில்...
இந்தநிலையில் கிருமி நாசினி திரவம் தயாரிப்பதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,750 டன் மூலப் பொருள்(மொலாசஸ்) நேற்று திருச்சி குட்ஷெட் யார்டுக்கு வந்தது. மொத்தம் 50 வேகன்களில் வந்த இந்த மூலப்பொருளை மோட்டார் எந்திரம் மூலம் டேங்கர் லாரிகளில் ஏற்றி திருச்சி லால்குடியில் உள்ள தனியார் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிருமி நாசினி திரவம் தயாரிக்கப்பட உள்ளது.
இதேபோல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 1,000 டன் நெல்மூட்டைகள் திருச்சி குட்ஷெட் யார்டுக்கு நேற்று வந்தன. அவற்றை சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேகன்களில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி மண்ணச்சநல்லூர், மணப்பாறை, மணிகண்டம் பகுதிகளில் உள்ள ஆலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.