நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 6 பேர் வீட்டுக்கு அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த 6 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2020-04-17 22:00 GMT
நாமக்கல்,

கொரோனா வைரஸ் நோயால் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 50 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்தது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே நாமக்கல்லை சேர்ந்த 2 பேர், பரமத்திவேலூரை சேர்ந்த 2 பேர், ராசிபுரத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் கொக்கராயன்பேட்டையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 பேர் குணமடைந்தனர்.

இதனால் அவர்கள் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 6 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு பழங்கள், கிருமிநாசினி மற்றும் முககவசங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் வழங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளுக்கு தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது அமைச்சர் தங்கமணி, மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., நாமக்கல் மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா, இணை இயக்குனர் (மருத்துவம்) சித்ரா, துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், துணை இயக்குனர் (காசநோய்) கணபதி, உதவி கலெக்டர் கோட்டைக்குமார் மற்றும் டாக்டர்கள், அதிகாரிகள் கைத்தட்டி குணமடைந்த 6 பேரையும் வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட 2 ஆயிரம் ரத்த மாதிரிகளில் 1,800 ரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது. அதில் 50 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருந்தது. மேலும் 200 மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை விவரம் இன்னும் ஒரிரு நாட்களில் வந்துவிடும்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 50 பேரில் 6 பேர் தற்போது குணமடைந்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. நாமக்கல் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் பரவியது. அது தவறான தகவல். அவர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் என்னோடு பங்கேற்று வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்