ஊரடங்கால் 25 நாட்களாக தவிப்பு: கேரளாவில் இருந்து குளச்சலுக்கு விசைப்படகில் வந்த குமரி மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்

ஊரடங்கால் 25 நாட்களாக கேரளாவில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 28 பேர் நேற்று குளச்சல் துறைமுகத்திற்கு வந்தனர்.

Update: 2020-04-18 01:22 GMT
குளச்சல், 

ஊரடங்கால் 25 நாட்களாக கேரளாவில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 28 பேர் நேற்று குளச்சல் துறைமுகத்திற்கு வந்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மீனவர்கள் தவிப்பு

உலகத்தையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 2-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஊரடங்கு உத்தரவுக்கு முன்னதாக வெளிமாநில கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.

பேச்சுவார்த்தை

அந்த வகையில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 20 மீனவர்கள் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த 4 பேர், தூத்துக்குடியை சேர்ந்த 2 பேர், நெல்லை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த தலா ஒருவர் என 28 மீனவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முட்டத்தை சேர்ந்த ஒருவரின் விசைப்படகில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்றனர்.

முதற்கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போதே இந்த மீனவர்கள் குமரி மாவட்டம் திரும்ப முயற்சித்தனர். இதையறிந்த கொல்லம் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அவர்களுக்கு தடை விதித்தனர். இதனால் 25 நாட்களுக்கு மேலாக அவர்கள் தனிமையில் வாடினர்.

இதற்கிடையே கொல்லத்தில் பரிதவிக்கும் மீனவர்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கொல்லம் கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்கள் நேற்று முன்தினம் ஒரு விசைப்படகில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு நேற்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

பரிசோதனை

கொரோனா அச்சம் இருப்பதால், மீனவர்கள் அனைவருக்கும் அதற்கான அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பு சிறப்பு நடமாடும் மருத்துவக்குழுவை சேர்ந்த டாக்டர்கள் பெர்லின், ஹெபிலா மற்றும் முட்டம் ஆரம்ப சுகாதார மைய ஆய்வாளர் அருள்தாஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் துறைமுகத்துக்கு விரைந்து சென்று தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையில் மீனவர்களுக்கு சீரான உடல் வெப்பநிலை இருந்தது. இதுதவிர சளி, காய்ச்சல் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து குமரி மாவட்ட மீனவர்கள் 20 பேரையும் வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர். ஆனால் மற்ற 8 மீனவர்கள், தொழிலுக்கு செல்லும் படகிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

குளச்சல் மீன்பிடித்துறைமுகம் வந்து சேர்ந்த மீனவர்களுக்கு நடந்த தெர்மல் ஸ்கேனர் பரிசோதனையின் போது கல்குளம் தாசில்தார் ஜெகதா, குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்சிலி, பங்குத்தந்தை மரிய செல்வன், குளச்சல் வருவாய் ஆய்வாளர் பிந்து, கிராம நிர்வாக அலுவலர் கலை செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்