மனைவி, குழந்தைகள் சிகிச்சையில் உள்ளதால் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீட்டுக்கு செல்ல மறுப்பு
கொரோனாவில் இருந்து மீண்டவர் வீட்டுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.;
நாகர்கோவில்,
கொரோனாவில் இருந்து மீண்டவர் வீட்டுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மனைவி, குழந்தைகள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ளதால் இவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
16 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களாக நாகர்கோவில் டென்னிசன் ரோடு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் தோப்பு பகுதி, நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டிப்பொட்டல் அனந்தசாமிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் கண்டறியப்பட்டனர்.
இதையடுத்து இவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நெருங்கி பழகியவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 3 பேரின் குடும்பத்தினர் மற்றும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
வீட்டுக்குச் செல்ல மறுப்பு
இந்த நிலையில் முதன் முதலாக கொரோனா பாதிப்புள்ளவர்களாக கண்டறியப்பட்ட 5 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் முடிவடைந்ததை தொடர்ந்து 5 பேருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நாகர்கோவில் வெள்ளாடிச்சி விளையைச் சேர்ந்தவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டது தெரிய வந்தது. அதை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
இதையடுத்து அவரை டாக்டர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தனர். ஆனால் அவர் தன்னுடைய குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் குணமாகும் வரை ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருக்கப்போவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் டாக்டர்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.
மூதாட்டிக்கு பரிசோதனை
இதற்கிடையே கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளவரின் பாட்டியான 88 வயது மூதாட்டியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து 14 நாட்கள் முடிந்ததையடுத்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் அவருக்குள் இருக்கும் கொரோனா வைரசுகள் பாதிப்படைந்து வருவதால் இன்னும் ஒருசில தினங்களில் அவர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று 5 பேர் பல்வேறு நோய்க்காரணங்களால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியின் தொற்றுநோய் பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. இதேபோல் புறநோயாளிகளாக சந்தேகத்தின்பேரில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் வந்தனர். அவர்களுக்கும் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் இருக்குமாறு டாக்டர்கள் ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனர்.
100 பேருக்கு பாதிப்பு இல்லை
நேற்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேகரிக்கப்பட்ட சளி மாதிரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் சேகரித்த சளி மாதிரிகள் என மொத்தம் 100 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் யாருக் கும் கொரோனா இல்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.