நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினசரி 5 முறை கிருமிநாசினி தெளிப்பு - நகராட்சி அதிகாரிகள் தகவல்

நாமக்கல் நகரில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தினசரி 5 முறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Update: 2020-04-17 22:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் நகரில் மட்டும் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி மஜித் தெரு, சுண்ணாம்புகார தெரு, பாவடி தெரு, டாக்டர் சங்கரன் சாலை உள்ளிட்ட 8 தெருக்களுக்கு போலீசார் ‘சீல்’ வைத்து உள்ளனர்.

இந்த பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதேபோல் அங்கு வசிக்கும் நபர்களுக்கும் தேவையான பொருட்களை வீடுகளுக்கே அதிகாரிகள் சென்று வழங்கி வருகின்றனர். இந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் சுகவனம் ஆகியோர் கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினசரி 5 முறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, 449 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 சரக்கு வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இதுவரை 450 லிட்டர் லைசால், 28,700 லிட்டர் ஹைப்போ குளோரைடு கரைசல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 2 டன் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே நாமக்கல் நகராட்சிக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கிருமிநாசினி தெளிக்க நவீன எந்திரம் வாங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்