தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது.

Update: 2020-04-17 23:45 GMT
மும்பை,

மும்பை தாராவி பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். எனவே இது குட்டி தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவிக்குள் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் நுழையாமல் இருந்தது. 

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி தாராவி பாலிகாநகரை சேர்ந்த 56 வயது துணிக்கடைக்காரர் கொரோனாவுக்கு பலியானார். அவரை தொடா்ந்து தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. 

நேற்று முன்தினம் வரை தாராவியில் 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இந்த புதிய நோயாளிகள் மாட்டுங்கா லேபர் கேம்ப், முஸ்லிம் நகர், இந்திரா நகரில் தலா 3 பேரும், சோசியல் நகரில் 2 பேரும், பாலிகா நகர், லட்சுமி சால், ஜனதா சொசைட்டி, சர்வோதயா சொசைட்டி ஆகிய இடங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதனால் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே கொரோனாவுக்கு 62 வயது ஆண் ஒருவர் சயான் ஆஸ்பத்திரியில் பலியானார். இதனால் தாராவியில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. அதிகபட்சமாக தாராவி பாலிகா நகரில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பகுதி வாரியாக விவரம்...

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. தாராவியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் பகுதி வாரியாக வருமாறு:-

முஸ்லிம் நகர்- 21, முகுந்த்நகர்- 18, சோசியல்நகர்- 10, ஜனதா சொசைட்டி- 9, பாலிகாநகர்- 5 , கல்யாணவாடி- 4, வைபவ் குடியிருப்பு- 2, மதினாநகர்- 2, தன்வாடாசால்- 1, பி.எம்.ஜி.பி. காலனி- 1, முருகன்சால்- 2, ராஜூவ்காந்தி சால்- 4, சாஸ்திரி நகர்- 4, நேரு சால்- 1, இந்திராசால்- 4, குல்மோகர்சால்- 1, சாய்ராஜ் நகர்- 1, டிரான்சிஸ்ட் கேம்ப்- 1, ராம்ஜி சால்- 1, சூர்யதேவ் சொசைட்டி- 2, லெட்சுமி சால்- 2, சிவ்சக்தி நகர்- 1, மாட்டுங்கா லேபர் கேம்ப்- 4.

மேலும் செய்திகள்