தேன்கனிக்கோட்டை அருகே, தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் மலை கிராம மக்கள்

தேன்கனிக்கோட்டை அருகே தண்ணீர் பஞ்சத்தில் மலை கிராம மக்கள் தவித்து வருகிறார்கள்.

Update: 2020-04-17 22:00 GMT
தேன்கனிக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பெட்ட முகிலாளம் ஊராட்சி. மலை கிராமமான இந்த ஊராட்சியில் தொ.பழையூர் மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சியால் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.

இந்த கிராமத்தில் 25 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இதில் ஊற்று தண்ணீர் ஊறும் வரையில் கிராம மக்கள் காத்து இருந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர். அதுவும் மிக குறைவான அளவே தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீரும் அசுத்தம் கலந்து வருகிறது. இதை குடிக்கும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படுகிறது. இதனால் கிராமமக்கள் குடிநீருக்கு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் குளங்களோ, ஏரிகளோ இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இங்குள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறோம்.

ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் கிராமமக்கள் கிணற்றை சுற்றி நின்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே இந்த மலை கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்