தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் -சாராய வழக்கில் 13 பேர் கைது
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாராய வழக்கில் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாராயம் விற்றதாக முருகன் (வயது 37), மம்பட்டியான் (45), செல்லதுரை (34), மாதேஸ்வரன் (33), மூர்த்தி (34), பிரபு (30) உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 53 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொப்பூர் அருகே உள்ள கோம்பை பகுதியை சேர்ந்தவர் மன்னன் என்கிற மனோகரன்(53). இவர் தனது விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தொப்பூர் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மனோகரன் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். குந்துகோட்டை அருகே ஏணிசந்திரம் வனப்பகுதியில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த மாரப்பா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சொப்புகுட்டை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய அஜ்மத்கான் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். 150 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது. முத்துராயன்கொட்டாய் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய பழனியப்பா (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் ஏரி சின்னகானம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாதப்பன் (37) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை செய்தபோது 50 லிட்டர் சாராய ஊறல் மற்றும் ஒரு லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாதப்பனை போலீசார் கைது செய்தனர்.