வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 3-வது மாடி பால்கனி இடிந்து விழுந்தது 3 சிறுவர்கள் காயம்

சென்னை கோடம்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 3-வது மாடி பால்கனி இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2020-04-17 22:38 GMT
பூந்தமல்லி, 

சென்னை கோடம்பாக்கம், தெற்கு சிவன் கோவில் தெருவில் புலியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. மிகவும் பழமையான இந்த கட்டிடத்தில் 428 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பின் ஈ பிளாக் 3-வது மாடியில் நிர்மல் என்பவர் வசித்து வருகிறார்.

நேற்று மாலை இவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள பால்கனியில் இவருடைய மகன் ஜீவா(வயது 10), பக்கத்து வீட்டில் வசிக்கும் பவித்ரன்(6) மற்றும் கவின்(9) ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென 3-வது மாடியின் பால்கனி இடிந்து 2-வது மாடியில் விழுந்தது. இதில் 2-வது மாடி பால்கனியும் இடிந்து முதல் மாடியில் உள்ள பால்கனியில் பலத்த சத்தத்துடன் விழுந்தது. 3-வது மற்றும் 2-வது மாடியில் உள்ள பால்கனிகள் முற்றிலும் இடிந்த நிலையில் முதல் மாடியில் உள்ள பால்கனியின் ஒரு பகுதி மட்டும் சேதமானது. 

இதில் 3-வது மாடி பால்கனியில் நின்றிருந்த சிறுவர்கள் 3 பேரும் கீழே விழுந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் பெற்றோர்கள் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்