மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.100 கோடி இழப்பு
கொரோனா நோய் தடுப்புக்காக போடப்பட்ட ஊரடங்கினால் மதுரை கோட்ட ரெயில்வேக்கு சுமார் ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரெயில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை ரெயில்வே கோட்டத்தை பொறுத்தமட்டில், மதுரையில் இருந்து பழனி, நெல்லை, தூத்துக்குடி, பாலக்காடு, திருச்செந்தூர், மயிலாடுதுறை, ஈரோடு, ராமேசுவரம், காரைக்குடி, விழுப்புரம், கேரள மாநிலம் கொல்லம் ஆகிய பகுதிகளுக்கு தினசரி பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் செங்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மதுரை வழியாக இயக்கப்படுகின்றன.
இதன் மூலம் மதுரை கோட்ட ரெயில்வேக்கு பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரெயில்கள் இயக்கப்படாததால், மதுரை கோட்ட ரெயில்வேக்கு முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட்டுகள் ஆகியவை மூலம் பயணிகள் போக்குவரத்துக்கான வருமானம் கடந்த 14-ந் தேதி வரை சுமார் ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, ரெயில் நிலையங்களில் உள்ள கடைகள், விளம்பர பலகைகள், பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் ஆகியவற்றின் மூலம் கணிசமான வருமானம் வந்து கொண்டிருந்தது.
அத்துடன், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி, மக்காச்சோளம், சிமெண்டு உள்ளிட்ட பொருட்களும் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே சரக்கு போக்குவரத்து மூலம் அதிக வருமானம் கிடைத்தது. ஊரடங்கால் ரெயில்வே நிர்வாகத்துக்கு சரக்கு, பயணிகள் போக்குவரத்து மற்றும் இதர வருமானமும் நின்று போனதால், கடந்த 14-ந் தேதி வரை சுமார் ரூ.100 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா பாதிப்பால் மதுரை கோட்ட ரெயில்வேக்கு இன்னும் அதிக அளவு வருமான இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.