திருவள்ளூர் அருகே, முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக் கொலை - தலைமறைவான சகோதரர்களுக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தலைமறைவான சகோதரர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-04-17 23:45 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் காலனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அசோக்குமார்(வயது 27). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும், கவுசிகா(3) என்ற மகளும், ரக்சித் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை அசோக்குமார் புன்னப்பாக்கம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் அவரது சகோதரரான சுரேந்திரன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து அசோக்குமாரை சுற்றிவளைத்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.இதில் தலை மற்றும் முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய அசோக்குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், கடந்த 2018-ம் ஆண்டு புன்னப்பாக்கம் காலனியைச் சேர்ந்த சுதாகர் என்பவர், தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டியபோது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுதாகர், அசோக்குமார், அஜய், தமிழ்மணி, சுரேந்தர் உள்ளிட்ட 5 பேரும் சுரேஷ்குமார் தரப்பினரை கத்தியால் வெட்டியதாக தெரிகிறது. இதுபற்றி சுரேஷ்குமார் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மேற்கண்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று அசோக்குமார் புன்னப்பாக்கம் பகுதியில் இருந்த போது, முன்விரோதத்தில் அவரை சுற்றிவளைத்த சுரேஷ்குமார் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசார் தலைமறைவாக உள்ள சகோதரர்களான சுரேந்திரன் மற்றும் சுரேஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்