தர்பூசணி பழங்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் - மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க. எம்.பி., எம் எல்.ஏ.க்கள் கோரிக்கை
விவசாயிகளுக்கு நஷ்டம் தர்பூசணி பழங்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க. எம்.பி., எம் எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிசை தி.மு.க. எம்.பி., க.செல்வம், செய்யூர் எம்.எல்.ஏ., ஆர்.டி. அரசு, திருப்போரூர் எம்.எல்.ஏ., எல். இதயவர்மன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், செய்யூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட தர்பூசணி பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வியாபாரிகள் யாரும் வாங்க முன்வராமல் வீணாகி வருவதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே தர்பூசணி பழங்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யவேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
மேலும் திருப்போரூர், செய்யூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல நாட்களாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேங்கியுள்ளது.
எனவே தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து அரசு குடோனுக்கு அனுப்ப வேண்டும்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.