பொங்கலூர் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது - 50 லிட்டர் ஊறல் பறிமுதல்

பொங்கலூர் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-04-17 21:45 GMT
பொங்கலூர், 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி தற்போது ஒரு சில இடங்களில் சாராயம் மற்றும் தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்வது நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பொங்கலூரை அடுத்த கள்ளிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வலையபாளையத்தில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு பாப்பான் (வயது 45), ராமசாமி (35), வீட்டின் உரிமையாளரான செந்தில்குமார்(45) ஆகிய 3 பேர் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் 3 பேரையும் கைது செய்து அங்கு சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த ஊறல் 50 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 4 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் பல்லடத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்